சட்டவிரோதமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கி இருக்கிறார்களா?-ஆய்வு நடத்தப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட சட்டவிரோதமாக தங்கி உள்ளனரா என அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

Update: 2023-04-01 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட சட்டவிரோதமாக தங்கி உள்ளனரா என அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

இலங்கை சேர்ந்தவர்கள் கைது

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த நல்லவன்சா மகன் துவான் சபைதீன் (45) என்பவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். அனுமதிக்கப்பட்ட காலத்தை விட தங்கியிருந்ததால் அவரது பாஸ்போர்ட்டு காலாவதியாகிவிட்டது. இதன்காரணமாக பனைக்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் போலி முகவரியில் பாஸ்போர்ட்டு பெற்ற போது சிக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு வந்த இவர் 13 ஆண்டுகாலம் சட்டவிரோதமாக தங்கியிருந்து அரசின் ஆவணங்களை பெற்றுள்ளார்.

இதேபோல, இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் முகம்மதுபாசில் (38). தொண்டி பகுதியில் வீடு பிடித்து தங்கி அரசின் ஆவணங்களை பெற்ற அவர் ஒருபெண்ணை திருமணம் செய்துகொண்டார். அடிக்கடி இலங்கை சென்று திரும்பிய அவர் வரும்போதெல்லாம் மர்ம நபர்கள் வந்துசென்றுள்ளனர். அவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது தனிப்பிரிவு போலீசார் போதைப்பொருளை கைப்பற்றினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு நபர்கள் ஏராளமானோர் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை விரிவான விசாரணை நடத்தி கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கேட்டபோது கூறியதாவது:-

ஆய்வு நடத்தப்படும்

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கையின் அருகாமையில் உள்ள பகுதி என்பதால் இலங்கை நபர்கள் அகதிகளாக வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் முகாமில் உரிய பதிவேடு மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்து ஆவணமின்றி தங்கியிருப்பவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினர் உரிய ஆவணங்களின்றி தங்கி உள்ளனரா என்று மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து வருவாய்த்துறையினருடன் இணைந்து அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப வெளிநாட்டினர் மீதான வழக்கு குறித்தும் ஆய்வு செய்து அதில் தொடர்புடைய நபர்கள் தங்கி உள்ளனரா என்று விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பல ஆண்டுகளாக இதுபோன்று தங்கி உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

----

Tags:    

மேலும் செய்திகள்