ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? கர்ப்பிணி பெண்கள் கருத்து
வீடுதேடிவந்து வழங்கும்திட்டம்; மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? கர்ப்பிணி பெண்கள் கருத்து
தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.
சத்துமாவு கலவை
கோதுமை மாவு (45.50 கிராம்), வறுத்த கேழ்வரவு மாவு (6 கிராம்), செறிவூட்டப்பட்ட பாமாயில் எண்ணெய் (5 மி.லி.), முளைகட்டிய கேழ்வரகு மாவு (5 கிராம்), கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு (10.50 கிராம்), வெல்லம் (27 கிராம்), தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (1 கிராம்) ஆகிய 7 பொருட்கள் அடங்கிய சத்துமாவு கலவை தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் வறுத்த கடலை மாவு (10 கிராம்), வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (5 கிராம்), வறுத்த வேர்க்கடலை மாவு (4 கிராம்) ஆகிய 3 மூலப்பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, சோயா மாவு வறுத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.
புது வடிவம்
2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவும் புது வடிவம் பெற்றுள்ளது. இதில் வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோயா மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த சத்துமாவு 'பாக்கெட்' தற்போது கலர்புல்லாக மாறி உள்ளது. என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பது எழுத்தாகவும், படமாகவும் 'பாக்கெட்' கவரில் பளிச்சென்று அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன? என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்மார்களுக்கு சத்து டானிக், புரோட்டீன் பவுடர், நெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி தொடங்கிவைத்தார். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
அதன்படி வீடு தேடி இந்த பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பவை பற்றி கர்ப்பணி பெண்கள் உள்ளிட்டோர் கூறிய கருத்துகள் வருமாறு:-
எளிதாக்க வேண்டும்
தென்காசியை சேர்ந்த சுதா:-
நான் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். அரசு வழங்கும் உதவித்தொகைக்காக விதித்துள்ள விதிகளின்படி முறையாக பதிவு செய்துள்ளேன். ஏழாவது மாதத்தில் இந்த உதவித்தொகையின் முதல் தவணை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை எனக்கு எந்தத்தொகையும் கிடைக்கவில்லை.
கஷ்டப்பட்டவர்கள் தான் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அரசு உதவித்தொகை உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பகுதிகளில் இருந்து பல பெண்கள் நடைமுறை சிக்கல்களால் கஷ்டப்படுகிறார்கள். எனவே உதவித்தொகை கிடைப்பதற்கு வழிமுறைகளை எளிதாக்க வேண்டும்.
கால தாமதம்
தென்காசி மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கோமதி தேவி:-
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. இதில் ரூ.14 ஆயிரம் பணமாக வழங்கப்படுகிறது. இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகம் தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. அந்த பெட்டகத்தில் நெய், பேரீச்சம் பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையில் முதல் குழந்தைக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரமும் மாநில அரசு ரூ.8 ஆயிரமும் வழங்குகிறது.
கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்சினை போன்ற காரணங்களால் கால தாமதம் ஏற்படலாம். இதனால் முதல் குழந்தைக்கு வழங்கப்படும் உதவித்தொகை தாமதமாக கிடைக்கும்.
உடனடியாக கிடைக்கும்
இரண்டாவது குழந்தைக்கு அது உடனடியாக கிடைக்கும். சிலர் உதவித்தொகை கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். அதற்கு முறையாக பதிவுகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
கணவன்-மனைவி ஆதார் அட்டைகளில் எந்த தவறும் இல்லாமல் இருக்க வேண்டும். வங்கி கணக்கில் அந்த ஆதார் அட்டை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளில் ஏதாவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காது. தென்காசி மாவட்டத்தில் முறையாக பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.9½ கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எங்களது இலக்கை அடைந்து விட்டோம்.
சத்துமாவு
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் சாந்தி:-
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு வழங்கும் மகப்பேறு உதவித்தொகை முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் தெளிவான பதில் இல்லை. இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பம் தரித்ததும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'பிக்மி' எண்ணுக்கு பதிவு செய்தவுடன் சுகாதார பணியாளர்களும், அங்கன்வாடி பணியாளர்களும் அக்கறையுடன் ஆலோசனை கூறினார்கள்.
கர்ப்பத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை வழங்கினார்கள். தற்போது வீட்டுக்கே வந்து ஊட்டச்சத்து பவுடர் வழங்கி உள்ளார்கள். இந்த பவுடர் மிகவும் தரமாக இருக்கிறது.
திட்ட அலுவலர்
பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா:-
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் விதமாக ஊட்டச்சத்து உணவுகள் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளங்குழந்தைகளின் தாய்மார்களுக்கு அதிக புரதம், இரும்புச்சத்து போன்ற பொருட்கள் அடங்கிய சிறப்பு பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உணவை சாப்பிடும் தாய்மார்கள் மூலம் குழந்தையின் எடை வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
கொழுக்கட்டை
ரெட்டியார்பட்டி அங்கன்வாடி பணியாளர் பொ.முருகசெல்வி:-
சத்துமாவில் கஞ்சி போல காய்ச்சியோ கொழுக்கட்டை போல தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தற்போது வழங்கப்படும் புதிய தரம் மேம்படுத்தப்பட்ட சத்துமாவு மூன்று விதமாக வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு விதமாகவும், 2 வயது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு ஏலக்காய் மணத்துடனும், 6 மாதம் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகும் வகையிலும் உள்ளது.
சத்துமாவு மூலம் இடியாப்பம், புட்டு, உளுந்தங்களி போல சத்துமாவு களி உருண்டை செய்து தரலாம். 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு தமிழக அரசு தினமும் 125 கிராம் வீதம் சத்துமாவு வழங்குகிறது. 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினசரி தலா 50 கிராம் சத்துமாவு கொழுக்கட்டை தயாரித்து அங்கன்வாடி மையங்களில் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உதவித்தொகை
வீடு தேடி வரும் ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் நிதி உதவி முறையாக கிடைப்பது இல்லை என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 'அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் 'பிக்மி' எண் பெற்று இங்கேயே பிரசவ கால உடல் பரிசோதனை மற்றும் பிரசவம், குழந்தைக்கு தடுப்பூசி ஆகியவற்றை மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் வங்கி கணக்கில் 5 தவணைகளாக ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.