சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களா ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகத்தில் எவரும் வாழ முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லையைச் சேர்ந்தவர் ஹாஜா சரீஃப். இவர் 2007-2008 -ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார். எனவே இதனை காரணமாக கூறி அவருக்கு 5 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு, பணபலன்கள் வழங்கவில்லை என அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,
காவலர் ஹாஜா சரீஃபிற்கு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இது ஏற்றுகொள்ள முடியாதது ஆகும். எனவே அவருக்கு பதவி உயர்வு மற்றும் பணபலன்களை வழங்க வேண்டும் என்றும் 4 வாரத்திற்குள் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிபதி பட்டு தேவானந்த் கூறியதாவது,
சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்திற்கு ஏற்றார்போல தங்களது சிந்தனைகள் மற்றும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் செய்யும் தவறுகளால் மனுதாரரைபோல எந்த தவறும் செய்யாதவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். உலகில் எவரும் பிறக்கும் போதே குறிப்பிட்ட மதம், சாதி ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பிறப்பது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டிற்கு சேவை செய்வதற்கு, தங்களது திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்க படவேண்டும். இந்த உலகில் யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகத்தில் எவரும் வாழ முடியாது. என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.