தினக்கூலி பணியாளர்களைவிட மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியமா? ராமதாஸ் கண்டனம்
தினக்கூலி பணியாளர்களைவிட மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியமா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது.
மழலையர் வகுப்புகளை நடத்துவதை அரசு தேவையற்ற சுமையாக கருதக்கூடாது. மழலையர் வகுப்புகள் தான் வலிமையான கல்விக்கு அடித்தளம் ஆகும். மழலையர் வகுப்புகளை மூடி விட்டால் கடுமையான எதிர்ப்பு எழும். அதனால் பெயரளவுக்கு மழலையர் வகுப்புகளை நடத்தி விடலாம் என்ற நிலைக்கு தமிழக அரசு வந்து விடக்கூடாது. மழலையர் வகுப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மழலையர் வகுப்புகளுக்கு தகுதியும், திறமையும் கொண்ட மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 2,381 பள்ளிகளுக்கும் 5,143 மாண்டிசோரி ஆசிரியர்களை இடஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.