வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.;

Update:2023-02-08 00:15 IST

கடலூர் வரலாறு, கலாசாரம் மற்றும் இயற்கை அழகுடன் செழுமையான பாரம்பரியத்தை கொண்ட மாவட்டமாக உள்ளது. கடற்கரைகள், கோவில்கள், காலத்தை கடந்த பாரம்பரியமான கட்டிடங்கள், கோட்டை, பாலங்கள், நூலகம், நினைவுச்சின்னங்கள் என மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வரலாற்று தலங்களும் நிறைய உள்ளன.

மாநகர மையப்பகுதியில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பற்றி தேவார பாடல்களில் இடம் பெற்றுள்ளது. கடலில் வீசப்பட்ட அப்பர் கல்லை தெப்பமாக மாற்றி கரையேறிய வரலாற்று நிகழ்வுகளும் நடந்த பகுதி இன்றும் உள்ளது. இந்த இடத்தை இன்றும் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

டேவிட் கோட்டை

வரலாற்று நினைவு சின்னமாக புனித டேவிட் கோட்டை பகுதி உள்ளது. சில்வர் பீச்சை ஒட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் இந்த கோட்டை அமைந்துள்ளது. செஞ்சி நாயக்கர்களின் மண்டலங்களின் கீழ் இந்த பிராந்தியம் இருந்தது. 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சு வங்காள விரிகுடாவில் தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்து வதற்காகவும், உள்ளூர் உற்பத்தியை பயன்படுத்திக்கொள்வதற்கும் கடலூரை தேர்ந்தெடுத்து செஞ்சியின் கிருஷ்ணப்பாநாயக்கர் அனுமதியுடன் தேவனாம்பட்டினத்தில் ஒரு கோட்டை கட்ட அனுமதி கோரியது.

1608-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான திட்டம் தொடங்கியது. ஆனால் போர்ச்சுகீசியர்களுக்கு பிறகு நாயக்கர்கள் பின்வாங்கினர். தொடர்ந்து கோரமண்டல் கோஸ்ட் வர்த்தகத்தில் மேலாதிக்கம் கொண்ட வீரர்கள் செஞ்சியின் ஆட்சியாளர்கள் டச்சு நுழைவை தடுக்க விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் வெங்கட்டை அமர்த்தினர். அதையடுத்து கோட்டையை சேர்ந்த செஞ்சி நாயக்கர்களால் நியமிக்கப்பட்ட வர்த்தகர்கள் கோட்டையை விட்டு வெளியேறினர்.

சுரங்கப்பாதை

வெளி நாட்டு வணிகம் தொடர்ந்தது. பிறகு செஞ்சி மராட்டியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது, சிவாஜியின் தேவாங்கம் பத்னம் கோட்டையை மிக உயர்ந்த ஐரோப்பிய ஏலத்திற்கு கொடுத்தார். 1690-ல் பிரிட்டீஷ் ஏலத்தில் டச்சு மற்றும் பிரெஞ்சு அரசு வெற்றி பெற்றது. பிறகு நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை கவர் னரான எலிஹூயேல் அந்த கோட்டையை வாங்கினார். அவர் வேல்ஷ் செயின்ட் டேவிட் என்ற பெயரில் செயின்ட் கோட்டை என பெயரிட்டார். 1746-ல் இந்த புனித டேவிட் கோட்டை இந்தியாவின் பிரிட்டீஷ் தலைமையகமாக மாறியது.

இத்தகைய புனித டேவிட் கோட்டை சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதில் சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் அவை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி அப்படியே கிடக்கிறது. இந்த டேவிட் கோட்டையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இரும்பு தொழிற்சாலை

இது தவிர தமிழகத்திலேயே முதல் இரும்பு தொழிற்சாலை அமைந்த நகரம் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது பரங்கிப்பேட்டை நகரம். மத நல்லிணத்திற்கு எடுத்து காட்டாக திகழும் பரங்கிப்பேட்டை வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு வருணாபுரி, முத்துகிருஷ்ணாபுரி, போர்ட் நோவோ என பல பெயர்கள் உள்ளன. சுதந்திரப்போருக்கு வித்திட்ட மைசூர் மன்னர் ஹைதர் அலி, சர்அயர்குட் என்ற ஆங்கிலத் தளபதியை எதிர்த்து போரிட்டது (கி.பி.1781) இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றை நினைவூட்டும் கல்வெட்டு, கடல் வாழ் உயிரின உயர் ஆராய்ச்சி மையம் அருகில் உள்ளது. சோழ மண்டல கடற்கரையான பரங்கிப்பேட்டையில் தான் 1575-ல் முதன் முதலாக போர்த்துக்கீசியர்கள் கால் பதித்தனர். 1660-ல் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து பரங்கிப்பேட்டையை டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். தமிழகத்திலேயே முதலாவது இரும்பு தொழிற்சாலை 1678-ல் இங்கு தான் ஏற்படுத்தப்பட்டது. இங்கு தயாரிக்கப் பட்ட தரம் மிகுந்த இரும்பு தண்டவாளங்கள் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலும், சிங்கப்பூர் விக்டோரியா ஹாலிலும் பரங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடன் இரும்பு தண்டவாளங்கள் காட்சியளிக்கின்றது. லண்டன் பாலத்திற்கும் இங்கு தயாரிக்கப்பட்ட இரும்புகள் தான் பயன்படுத்தப்பட்டன. ஜவ்வரிசி ஆலையும், பரங்கிப்பேட்டையில் பெரிய அளவில் இருந்தது.

துறைமுகம்

இரண்டாவது உலகப் போர் வரை பரங்கிப்பேட்டையில் துறைமுகம் சிறப்புற்றிருந்தது. மலேசியா, தாய்லாந்து, பர்மா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரங்கிப்பேட்டைவாசிகளான சலங்குக்காரர்களும், மரைக்காயர் களும் வாணிபம் செய்து வந்தனர்.

அதில் எம் அண்டு சி ஸ்டீமர் ஏஜென்சி சுல்தான் மரைக்காயர் சகோதரர்கள் ஷிப்பிங் ஏஜென்சி, செமட்டியார் கம்பெனி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை எல்லாம் தற்போது அழிந்து அதன் சுவடுகளே தெரியாமல் உள்ளது. கடலூர் துறைமுகம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சிறந்த வணிக பகுதியாக இருந்தது. தற்போது இதை புனரமைத்து வருகிறார்கள்.

1918-ம் ஆண்டு கடலூருக்கு காந்தியடிகள் வந்தார். அவரை அப்போது போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி வீரமங்கை அஞ்சலையம்மாள் குதிரையில் வந்து சந்தித்தார். இதனால் அவருக்கு தென்னாட்டு ஜான்சிராணி என்ற பட்டத்தை காந்தியடிகள் வழங்கினார். காந்தி கட்டிடம் என்றழைக்கப்பட்ட தற்போதைய சேவா மந்திர், மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்விக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அவர் பயன்படுத்திய செருப்பு நினைவு சின்னமாக உள்ளது.

நடராஜர் கோவில்

கடலூர் கேப்பர் மலையில் பழமைவாய்ந்த மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலை 1865-ம் ஆண்டு ஆங்கிலேயேர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பமாக இருந்து, பிறகு சிறைச்சாலையாக மாறியது. இந்த சிறையில் கடந்த 20.11.1918 முதல் 14.12.1918 வரை 25 நாட்கள் பாரதியார் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதன் நினைவாக அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர் தங்கிய அறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பாரம்பரிய சின்னமாகசிதம்பரம் நடராஜர் கோவில் விளங்கி வருகிறது. பரதகலை, கட்டிட கலை, கல்வெட்டு ஆவணங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் மிகப் பெரிய நூலகம் இருந்தது. இங்கு தான் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை தொகுத்ததாகவும், பெரிய புராணம் தமிழுக்கு கிடைத்தது. அழிவின் விளம்பில் இருந்த திருமுறைகளை ராஜராஜ சோழன் மீட்டு சரஸ்வதி பண்டாரத்தில் ஒப்படைத்தார். தென்னகத்தில் நூலகம் பெற்ற கோவில் நடராஜர் கோவில் தான் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வீராணம் ஏரி

இது தவிர நீர் மேலாண்மையின் பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் வீராணம் ஏரி உள்ளது. 1200 ஆண்டுகளை கடந்து இன்றும் சென்னை மாநகர மக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கி வருகிறது. சிதம்பரத்தை பாதுகாத்து வரும் ஏரியாக உள்ளது. இது தவிர ஆங்கிலேயேர்கள் கட்டிய கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகமும் உள்ளது. இதில் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடம் சேதமடைந்து வருகிறது.

பிச்சாவரம்

மேலகடம்பூரில் முதலாம் குலோத்துங்கசோழனால் கட்டப்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், வணிகத்திற்கு பெயர் போன கடலூர் துறைமுகம், வள்ளலார் அமைத்த சத்திய ஞானசபை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகசுவாமி, மேல்பட்டாம்பாக்கம் சரபேசுவரர் கோவில், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கண்டேஸ்வரர் நடனபாதேஸ்வரர், மா.ஆதனூர் திருநாளை போவார், திருவதிகை வீரட்டானேஸ்வரர் என முற்கால சோழ, பல்லவ கால கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கக்கூடிய தகுதி பெற்றதாக உள்ளது. இது தவிர பழமைவாய்ந்த பள்ளிவாசல்கள், தேவாலயங்களும் உள்ளன.

இவ்வாறு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருக்கும் புராதன சின்னங்கள் குறித்து பொதுமக்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

பாரம்பரிய சுற்றுலாவாக...

வடலூரை சேர்ந்த வரலாற்று துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்:-

கடலூர் மாவட்டம் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியது. சிதம்பரம் நடராஜர் கோவில் பரதம், கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது தவிர புனித டேவிட் கோட்டை, இரும்பு தொழிற்சாலை, இயற்கையாக உருவான பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளன. இது தவிர 1000 ஆண்டுகளை கடந்த கோவில்கள், கட்டிடங்கள் உள்ளன. வீராணம் ஏரியின் வரலாறு, ஆவணங்களை தொகுத்து தமிழக அரசு வெளியிட வேண்டும். சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த ஏரியை காண வருகின்றனர். ஆகவே இதை ஒரு பண்பாட்டு சுற்றுலா தலமாக்க வேண்டியது அவசியம்.

இவற்றை பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்றினால், அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஜெர்மனி, பிரான்ஸ், ரோம், சீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய சுற்றுலா தலங்கள் உள்ளன. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் பாரம்பரிய சுற்றுலா தலங்களை பார்வையிட குறைந்த கட்டணம் வசூலித்து செயல்படுத்தினால், படிக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அதாவது தமிழர்களின் வீரம், கட்டிட கலை போன்றவற்றை உணர்வு பூர்வாக காண முடியும். இதன் மூலம் தீய பழக்கத்தில் மாணவர்கள் செல்ல மாட்டார்கள். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொக்கிஷம்

சிதம்பரத்தை சேர்ந்த கவிதா:-

கடலூர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தையும் அரசு தான் பாதுகாக்க வேண்டும் என்று இருக்க கூடாது. பொதுமக்களாகிய நமக்கும் அதை பாதுகாப்பதில் கடமை, பொறுப்பு இருக்கிறது. இந்த பாரம்பரிய மிக்க நினைவு சின்னங்கள் பற்றி இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும். செல்போனிலேயே மூழ்கி கிடக்கும் அவர்களை இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வதும் அவசியம்.

பெரியநற்குணம் இளங்கோவன்:-

வரலாற்று நினைவு சின்னங்களை புத்தகத்தில் படிப்பதை காட்டிலும். அதை நேரில் பார்ப்பது நல்லது. நேரில் பார்த்தால் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கும். வீராணம் ஏரி 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஏரியை மனிதர்களே வெட்டி உள்ளனர். அதாவது போர் வீரர்களே கொண்டு வெட்டப்பட்ட ஏரி ஆகும். இந்த ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும். பழமைவாய்ந்த கட்டிடங்கள், கோவில்களை பராமரித்தால், அடுத்த தலைமுறைக்கும் இந்த கட்டுமானம், கலைகள் தெரிய வரும். அதற்கு பாரம்பரிய நினைவு சின்னங்களை பராமரித்து பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்