அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என மறுஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வெடி தயாரிப்பு நிறுவனங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என மறுஆய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-06 00:15 IST

கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான வாணவெடி தயாரிக்கும் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, படுகாயமடைந்து நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாசிலாமணி, பக்கிரிசாமி, மாரியப்பன் ஆகிய 3 பேரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான தனியார் வாணவெடி தயாரிக்கக்கூடிய நிறுவனத்தில் நேற்று வெடிவிபத்து நடந்திருக்கிறது. இதில் மாணிக்கம், மதன், நிகேஷ், ராகவன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மணிகண்டன், மாசிலாமணி, பக்கிரிசாமி, மாரியப்பன் ஆகிய நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 3 பேர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடவடிக்கை

இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. இது எதனால் ஏற்பட்டது என்று தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளோம். உராய்வின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த விபத்து நடந்தது தெரிந்ததும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், இங்கு வெடிவிபத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று வழங்கப்படும்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதனை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்றார். அப்போது, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரன், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், நாகை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்