இலவசங்கள் அவசியமா?
இலவசங்கள் அவசியமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர்.
இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.
உயிர் ஆதாரம்
இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வு ஆதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது. இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.
பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு
இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.
இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.
இதுபற்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இலவசங்களை ஒழிக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே காரைக்குறிச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் பிரீத்தி:- இலவச திட்டங்களில் வழங்கப்படும் பொருட்கள் நீண்ட கால தேவைக்கானதாகவோ அல்லது ஒரு குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்தை மையப்படுத்தியோ கொடுக்கப்படுவதாக இல்லை. இதற்கு மாற்றாக இலவச திட்டங்களுக்கு கொடுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை ஒன்று திரட்டி வீட்டிற்கு ஒரு பட்டதாரி இளைஞனுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த குடும்பத்தின் பொருளாதாரம் தன்னிறைவு பெறும். அரசின் திட்டங்கள் தற்காலிகமானதாக இல்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தர திட்டமாக அமைய வேண்டும். எனவே இலவசங்களை அறவே ஒழிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் விலையை...
வி.கைகாட்டியை சேர்ந்த ராதிகா:-
இலவச திட்டங்களில் பொருட்கள் கொடுப்பதால் காலப்போக்கில் அத்தியாவசிய பொருட்களின் விலை நமக்கு தெரியாமலேயே உயர்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு டவுன் பஸ்சில் இலவச பயண திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை மிகவும் பாதித்து வருகிறது. எனவே இலவச பொருட்களை கொடுப்பதை நிறுத்திவிட்டு அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தரமாக இருக்க வேண்டும்
உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் இலவசங்கள் அவசியமா?கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன்:-
தற்போதும் பொதுமக்கள் பலர் வறுமை கோட்டிற்கு கீழ்தான் வாழ்கின்றனர். எனவே இலவச திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமையை அரைத்து மாட்டிற்கு தவிடாக பயன்படுத்துகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையை குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். எனவே அரசின் திட்டங்களில் இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.