பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா?
பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா? என வாகன பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கால்நடையாக பயணம் செய்து வந்த மனிதர்கள், கால்நடைகளை பயணத்திற்கு பயன்படுத்த தொடங்கிய பிறகுதான் வாகனங்கள் உருவாக தொடங்கின.
மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்பட்ட காலங்களில் நமக்கு பயணத்தூரமும், பயணச்செலவும் குறைவாகவே இருந்தன.
பெட்ரோல், டீசல்
மிஞ்சினால் ஒருநாளில் ஐந்தோ, பத்தோ கிலோ மீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும். கொஞ்சம் புல்லும், கொள்ளும், புண்ணாக்கும் மட்டுமே செலவாக இருக்கும்.
மாடு, குதிரைகளின் கழிவுகளில் பக்கவிளைவுகள் இல்லை. பயன்கள் மட்டுமே இருந்தன. வாகனங்களில் என்று எந்திரம் நுழைந்ததோ அன்று, பயணதூரமும் அதிகமானது. பெட்ரோல், டீசல், கியாஸ் என்று பயணச் செலவும் அதிகமாக உயர்ந்தது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பக்கவிளைவுகளும் அதிகமானது.
பேட்டரி வாகனங்கள்
இன்றைய காலகட்டத்தில் நாம் பயணத்தையோ, பயண தூரத்தையோ குறைக்க முடியாது. பயணச்செலவையும், பக்க விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு வசதியாக வந்து இருப்பதுதான் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள்.
பொது போக்குவரத்துகளை நாடி, தேடிச்சென்ற மக்கள், இப்போது நினைத்த நேரத்தில் பயணப்பட்டு செல்லும் வகையில், சொந்தமாக வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வாகனம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாகிவிட்டது.
எரிபொருள் விலை
வாகன எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றம் கண்டதால், புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது.
அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, நவீன நாகரிக சூழலுக்கு ஏற்ற வகையில் சந்தைக்கு வந்திருக்கும் மின்சார வாகனங்கள் மேல் தற்போது பலர் கவனம் திரும்பி இருக்கிறது.
விலை அதிகம் என்பதால், ஆரம்பத்தில் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை ஏற்றம், மாசு இல்லை, செலவு குறைவு, அரசு மானியம் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் பார்வை அதன்மேல் விழத்தொடங்கி இருக்கிறது.
அதன் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை சற்றுக் குறைத்ததோடு, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.
இடையில் ஆங்காங்கே சில மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தினாலும், அது தற்போது மறைந்து, மீண்டும் விற்பனை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வசதியாக இருக்கிறதா?
பேட்டரி விலை அதிகமாக இருக்கிறது, சார்ஜிங் வசதி போதுமான இடங்களில் இல்லை போன்ற சில குறைகள் கூறப்பட்டாலும், மின்சார வாகனங்கள் எதிர்கால மாற்றத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நகரங்களில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களிலும் இனி அதற்கான வசதிகள் வரவாய்ப்பு இருக்கிறது.
தற்போது மின்சார வாகனங்கள் மக்களின் பயன்பாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? எந்த வகையில் வசதியாக இருக்கிறது? அதன் சாதக பாதகம் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-
மக்களிடம் வரவேற்பு
வாகன விற்பனையாளர் சிவகாசி ராஜசேகரன்:- பேட்டரி வாகன விற்பனையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேட்டரி வாகனங்கள் விற்பனை ஆனது. தற்போது பொதுமக்கள் மத்தியில் பேட்டரி வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரூ.60 ஆயிரத்தில் இருந்து பேட்டரி வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 6 மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும்.
பேட்டரி வண்டிகளில் உதிரிபாகங்கள் குறைவு. நல்ல முறையில் பராமரித்து வந்தால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேட்டரியை மட்டும் மாற்ற வேண்டி வரும். வேறு எவ்வித பிரச்சினையும் பெரும்பாலும் வந்தது இல்லை. ஆரம்பத்தில் மோட்டார் சைக்கிள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது பேட்டரியால் இயங்கும் சரக்கு வாகனங்களும் விற்பனை செய்யப்படுகிறது. பேட்டரி வண்டிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய போதிய தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அதிக அளவில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல்
வத்திராயிருப்பை சேர்ந்த ஜெயராஜ்:-
தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தவாறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்லும் நிலையில் பொதுமக்களின் பொருளாதாரத்தை மிச்சப்படுத்துவதற்கு பெரிய பங்கினை வைக்கிறது. பாதுகாப்பு அம்சங்களுடன் பேட்டரி வாகனங்கள் வருவதால் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் இல்லாததால் அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம்.
மறு விற்பனை
விருதுநகர் மெக்கானிக் செந்தில்குமார்:-
நான் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணி செய்து வரும் நிலையில் சொந்தமாகவும் பேட்டரி வாகனம் வைத்துள்ளேன். பேட்டரி இருசக்கர வாகனத்தை பொருத்தமட்டில் டயர், பிரேக் ஷூ ஆகியவை மட்டுமே பழுதாக வாய்ப்புள்ளது. இதை தவிர பேட்டரி நீண்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். பேட்டரி சார்ஜ் செய்து விட்டு உடனடியாக வண்டி எடுப்பதை விட சிறிது நேரம் கழித்து எடுத்தால் எவ்வித விபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த வாகனத்திற்கு பராமரிப்பு செலவு குறைவு தான். மறு விற்பனைக்கு தற்போதைய நிலையில் அவசியமில்லாத நிலையே உள்ளது.
சர்வீஸ் வசதி
அருப்புக்கோட்டை பொறியியல் பட்டதாரி நிஷா:-
பேட்டரி மோட்டார் சைக்கிளை இயக்குவது மிக எளிமையாக உள்ளது. தற்போது பல்வேறு வகையான மாடல்களில் பேட்டரி மோட்டார் சைக்கிள்கள் வந்துவிட்டது. தேவைக்கு ஏற்றாற்போல் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதனால் தங்களுக்கு எரிபொருள் மிச்சம் ஆகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதும் குறைகிறது. ஆனால் மின்சார வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்கு சரியான பணியாளர்கள் இல்லை. பொது இடங்களிலும் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு தேவையான வசதிகள் இல்லை.
2 வகையான உரிமம்
விருதுநகர் விற்பனையாளர் அருண்:-
எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் விற்பனை நிலையம் வைத்துள்ளேன். இதில் உரிமம் பெற அவசியமில்லாத மாடல் மற்றும் உரிமம் பெறவேண்டிய மாடல் என 2 வகை மாடல்கள் உள்ளன. உரிமம் பெற தேவையில்லாத மாடல் 5 மணி நேரம் பேட்டரி சார்ஜ் செய்தால் 35 கி.மீ. வேகத்தில் 50 கிலோமீட்டர் வரை செல்லும். உரிமம் பெற வேண்டிய மாடல் விலை ரூ.95 ஆயிரம் வரை ஆகிறது. இந்த மாடல் வாகனம் 5 மணி நேரம் பேட்டரி சார்ஜ் செய்தால் 50 கி.மீ.் வேகத்தில் 80 கி.மீ. வரை செல்லும்.
பொதுவில் வயது முதிர்ந்தவர்கள், எடை குறைந்த, உரிமம் பெற அவசியம் தேவையில்லாதவர்கள் பேட்டரி வாகனத்தை தான் விரும்பி வாங்குகின்றனர். சராசரியாக ஒரு மாதத்திற்கு 30 வாகனங்கள் வரை விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.