பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பைப் பெறுகிறதா?
கால் நடையாக பயணம் செய்து வந்த மனிதர்கள், கால்நடைகளை பயணத்திற்கு பயன்படுத்த தொடங்கிய பிறகுதான் வாகனங்கள் உருவாக தொடங்கின.
மாடு, குதிரை வண்டிகள்
மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்பட்ட காலங்களில் நமக்கு பயணத்தூரமும், பயண செலவும் குறைவாகவே இருந்தன. மிஞ்சினால் ஒருநாளில் ஐந்தோ, பத்தோ கிலோ மீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும். கொஞ்சம் புல்லும், கொள்ளும், புண்ணாக்கும் மட்டுமே செலவாக இருக்கும்.
மாடு, குதிரைகளின் கழிவுகளில் பக்கவிளைவுகள் இல்லை. பயன்கள் மட்டுமே இருந்தன.
வாகனங்களில் என்று எந்திரம் நுழைந்ததோ அன்று, பயணதூரமும் அதிகமானது. பெட்ரோல், டீசல், கியாஸ் என்று பயண செலவும் அதிகமாக உயர்ந்தது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பக்கவிளைவுகளும் அதிகமானது.
பேட்டரி வாகனங்கள்
இன்றைய காலகட்டத்தில் நாம் பயணத்தையோ, பயண தூரத்தையோ குறைக்க முடியாது. பயணச் செலவையும், பக்க விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு வசதியாக வந்து இருப்பதுதான் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள்.
பொது போக்குவரத்துகளை நாடி, தேடிச்சென்ற மக்கள், இப்போது நினைத்த நேரத்தில் பயணப்பட்டு செல்லும் வகையில், சொந்தமாக வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வாகனம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாகிவிட்டது.
எரிபொருள் விலை
வாகன எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றம் கண்டதால், புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, நவீன நாகரிக சூழலுக்கு ஏற்ற வகையில் சந்தைக்கு வந்திருக்கும் மின்சார வாகனங்கள் மேல் தற்போது பலர் கவனம் திரும்பி இருக்கிறது.
விலை அதிகம் என்பதால், ஆரம்பத்தில் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை ஏற்றம், மாசு இல்லை, செலவு குறைவு, அரசு மானியம் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் பார்வை அதன்மேல் விழத்தொடங்கி இருக்கிறது.
அதன் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை சற்று குறைத்ததோடு, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டத்தொடங்கி இருக்கின்றன.
இடையில் ஆங்காங்கே சில மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அது தற்போது மறைந்து, மீண்டும் விற்பனை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வசதியாக இருக்கிறதா?
பேட்டரி விலை அதிகமாக இருக்கிறது, சார்ஜிங் வசதி போதுமான இடங்களில் இல்லை போன்ற சில குறைகள் கூறப்பட்டாலும், மின்சார வாகனங்கள் எதிர்கால மாற்றத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். நகரங்களில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களிலும் இனி அதற்கான வசதிகள் வரவாய்ப்பு இருக்கிறது.
தற்போது மின்சார வாகனங்கள் மக்களின் பயன்பாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? எந்த வகையில் வசதியாக இருக்கிறது? அதன் சாதக பாதகம் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-
பெட்ரோல் செலவு அதிகம்
மின்சார மோட்டார் சைக்கிளுக்கு மாறிய புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த கார்த்திக்:- நான் பெட்ரோலில் இயங்க கூடிய மொபட் தான் பயன்படுத்தி வந்தேன். ஒரு நாளைக்கு குறைந்தது குறிப்பிட்ட தூரம் வண்டி ஓட்டுவேன். தற்போது பெட்ரோல் விலையை ஒப்பிடும் போது செலவு அதிகமாகுகிறது. இதனால் மின்சார மோட்டார் வாகனத்தை பயன்படுத்த திட்டமிட்டு வாங்கினேன். மின்சார மோட்டார் சைக்கிளின் விலையை பொறுத்தவரை பெட்ரோலில் இயங்க கூடிய மோட்டார் சைக்கிளுக்கு இணையாகவே உள்ளது. இருப்பினும் மின்சார பைக்கிற்கு அரசு தரப்பில் மானியமும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் மின்சாரம் மூலம் சார்ஜ் ஏற்றி வண்டியை எளிதாக பயன்படுத்த முடியும். செலவினத்தை ஒப்பிடும் போது கொஞ்சம் குறையும்.
விழிப்புணர்வு இல்லை
சடையம்பட்டியை சேர்ந்த உலக கணேசன்:- பெருகிவரும் மக்கள் தொகையால் காடுகளும், அதிகப்படியான மரங்களும் வெட்டப்படுகின்றன. மேலும் எரிபொருள் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் பூமி அதிக வெப்பமடைந்து குறிப்பிட்ட நேரத்தில் பெய்ய வேண்டிய மழையும் சரிவர பெய்வதில்லை. இதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் எரி பொருள் வாகனத்திற்கு மாற்றாக மின்சார வாகனங்களை தயாரித்து அதனை சந்தைப்படுத்தியுள்ளது. ஆனால் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. மேலும் ஒருசில மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிந்ததால் அதன் விற்பனை பாதிக்கப்பட்டது. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் பூமி வெப்பமடைவது முற்றிலும் குறைகிறது. மேலும் புகை, தூசு போன்ற மாசுபாடு இல்லாத இயற்கையான இந்தியாவை உருவாக்கலாம்.
வசதியாக உள்ளது
பெட்ரோலில் இயங்கும் மொபட் பயன்படுத்தும் பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த்:- மின்சார பைக் பற்றி எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு பெட்ரோலில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள் தான் நன்றாக உள்ளது. இது சாதாரணமாக எளிதில் பயன்படுத்தவும், எங்கும் செல்லவும் வசதியாக உள்ளது. பெட்ரோல் செலவு அதிகமாக இருந்தாலும் ஒருபுறம் வண்டியை ஓட்டுவதில் சிரமம் இல்லாமல் உள்ளது. அதனால் மின்சார பைக்கிற்கு மாறுவதற்கு எனக்கு விருப்பமில்லை.
2 வகை வாகனம்
திருமயம் அருகே கீழ சேவல்பட்டியை சேர்ந்த வாகன விற்பனை மேலாளர் செல்வமுத்துக்குமார்:- மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து தான் வருகிறது. இதில் 2 வகை மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடியது, பதிவு செய்யப்படாமல் பயன்படுத்தக்கூடிய வண்டி என உள்ளன. இதில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கக்கூடியவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 30 கிலோ மீட்டர் வேகத்திற்குள் இயங்கக்கூடிய வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை. இதில் பெரும்பாலும் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். மின்சார மோட்டார் வாகனத்தில் சார்ஜ் ஏற்றும் வசதி சாலைகளில் ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வைக்கலாம். ஒரு முறை மின்சாரம் ஏற்றி சார்ஜ் செய்தால் வண்டி 80 முதல் 90 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும். அதன்பிறகு சார்ஜ் ஏற்ற வேண்டியது வரும். இதற்கான வசதியை வெளி இடங்களிலும் ஏற்படுத்தினால் இந்த வாகனத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், ''மின்சார கார்களை விட மின்சார மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சார வாகனங்கள் தீப்பிடித்தல் போன்ற சம்பவம் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஆனால் அதன்பின் அவை பற்றி எடுத்துரைத்து நிறுவனத்தினர் விளக்கமளித்தனர். இதனால் மின்சார வாகனங்களை மீண்டும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடும் போது மின்சார வாகனங்களை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருகிற ஆண்டுகளில் இந்த வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விற்பனை
ஆண்டு - மொத்த வாகனங்களின் பதிவு - மின்சார வாகனங்கள் பதிவு
2018 - 21,14,575 - 1,332
2019 - 19,68,529 - 3,444
2020 - 14,92,303 - 5,698
2021 - 15,14,902 - 30,034
2022 - சுமார் 15 லட்சம் - சுமார் 53 ஆயிரம்
31 கோடி வாகனங்கள்
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் சுமார் 31 கோடி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 10 சதவீதம் தமிழகத்தில்தான் நடந்து இருக்கின்றன.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாகனங்கள் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டின் நவம்பர் மாத விற்பனையைவிட அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
அதன்படி, இருசக்கர வாகனங்கள் 24 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 80 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் (கார் உள்பட) 21 சதவீதமும், டிராக்டர் 57 சதவீதமும், வணிக ரீதியிலான வாகனங்கள் 33 சதவீதமும் விற்பனை உயர்ந்துள்ளது.