தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-16 18:33 GMT

ஆய்வக கட்டிடம்

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சுமார் ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டிடங்கள் கட்டுவதுடன், நவீன முறையில் மேலை நாடுகளுக்கு இணையாக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உபகரணங்கள் வாங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் ரூ.124 கோடி மதிப்பில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

அதன்படி கடலூர், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய 4 தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டுமின்றி பிற உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் தலா ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நவீன முறையில் பயிற்சி பெற்று, அவர்கள் விரும்புகிற பணிக்கு செல்லும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும் திறன் பயிற்சியும் அளித்து, வெளி நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்களை கொண்டு வந்து வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். இதுவரை தமிழகத்தில் 66 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, 99 ஆயிரத்து 990 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்