அதிக அளவில் வருவாய் ஈட்டி கொடுத்ததற்காக கரூர் டாஸ்மாக் அதிகாரி உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது

அதிக அளவில் வருவாய் ஈட்டி கொடுத்ததற்காக டாஸ்மாக் அதிகாரி உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் நேற்று திரும்ப பெறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த சான்றிதழில் திருத்தம் செய்து அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.

Update: 2023-01-27 18:48 GMT

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழாவில் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு சான்றிதழ் ஆண்டுதோறும் வழங்குவது வழக்கமாக உள்ளது. அதேபோல் சிறப்பாக பணியாற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் குடியரசு தினவிழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குக்கும், ஊழியர்களும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

திரும்ப பெறப்பட்ட பாராட்டு சான்றிதழ்

இதில், கரூர் மாவட்டத்தில் மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக கரூர் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சண்முக வடிேவல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறியது. மேலும், டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறித்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் வடிவிலான பதிவுகளும் ஏராளமாக பதிவானது. இதன் காரணமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மேற்பார்வையாளர்கள் 2 பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.

மீண்டும் வழங்கப்பட்ட சான்றிதழ்

இந்த நிலையில் திரும்ப பெறப்பட்ட சான்றிதழில் இருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக என்ற வாசகத்தை மட்டும் திருத்தம் செய்தனர். பின்னர் அதில், டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ் என மாற்றி அந்த பாராட்டு சான்றிதழ் 4 பேருக்கு திரும்பவும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் கரூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்