மத்திய அரசு துறைகளில் 250 பேருக்கு பணி நியமன ஆணை: மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு துறைகளில் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
சென்னை,
நாடு முழுவதும் நடைபெறும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு விழாவின் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு பணிநியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரி எல்.முருகன் நேற்று வழங்கினார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, பாரத ஸ்டேட் வங்கி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தபால்துறை, ரெயில்வே, வருமானவரித்துறை, தகவல் ஒலிபரப்பு உள்பட 14 துறைகளில் இளைஞர்களுக்கு வேலை நியமன ஆணைகளை அவர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் எல்.முருகன் கலந்துரையாடினார்.
தொலைநோக்குப் பார்வை
பின்னர் நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
செய்வதைச் சொல்வோம், சொன்னதைச் செய்வோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. பணி நியமனங்களை பெற்றுள்ள இளைஞர்கள், எளிமை, பொறுப்புணர்வு, கடமை உணர்வு, திறன் வளர்ச்சி, வருங்காலத்தை தீர்மானிக்கும் உணர்வு ஆகியவற்றுடன் பணியாற்றவேண்டும். மாநிலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்படுகின்றன.
சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிய அமிர்த காலத்தின்போது உலகுக்கு வழிகாட்டும் நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். இதை மனதில்கொண்டு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும். இந்த இலக்கை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.