147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கோவை சரகத்தில் குற்றங்களை தடுக்க 147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறினார்.;

Update:2023-10-20 01:45 IST
கோவை சரகத்தில் குற்றங்களை தடுக்க 147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறினார்.


கண்காணிப்பு அதிகாரிகள்


கோவையில் டி.ஐ.ஜி. சரவண சுந்தர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-


கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் குற்றங்கள், விபத்துகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கிராமப்புற பகுதிகள் என்று அனைத்து இடங்களுக்கும் போலீசார் சென்று கண்காணிக்கும் வகையில் பீட் ஆபீசர் (கண்காணிப்பு அதிகாரிகள்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 42 இடங்கள், திருப்பூரில் 34 இடங்கள், ஈரோட்டில் 58 இடங்கள், நீலகிரியில் 13 இடங்கள் என மொத்தம் 147 இடங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.


இரவு நேர கண்காணிப்பு


இதனால் வழிப்பறி குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு கோவை சரகத்தில் 123 வழிப்பறி குற்றங்கள் நடைபெற்றது. தற்போது 72 ஆக குறைந்துள்ளது. கொள்ளை குற்றங்கள் கடந்த ஆண்டு 62 நடைபெற்றது. தற்போது 43 ஆக குறைந்துள்ளது.


வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றங்கள் கடந்த ஆண்டு 23 நடைபெற்றது. இந்த ஆண்டு 20 ஆக குறைந்து உள்ளது. எனவே இந்த திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள், அடகு கடைகள், பூட்டி இருக்கும் வீடுகளுக்கு இரவு நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.


சிக்கும் பழைய குற்றவாளிகள்


அதே நேரத்தில் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. ஆனால் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையின்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கோவையில் அதிகமாக உள்ளது இதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சந்தேகப்படும் ஆசாமிகளின் முகத்தை செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பழைய குற்றவாளிகள் சிக்கி வருகிறார்கள். கைரேகைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பெறாமல், சம்பந்தப்பட்ட இடத்திலேயே பதிவு செய்யும் திட்டம் முதல் முறையாக திருப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக நவீன காகிதம் பயன்படுத்தப்படுகிறது. இது மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.


கிராமங்களில் கேமரா


அதோடு கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்த அந்தந்த ஊராடசி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நுழைவு பாதை, முடியும் பாதைகளில் என மொத்தம் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்