குரூப்-1 பதவி: 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Update: 2024-03-28 14:17 GMT

சென்னை,

குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. 16 துணை கலெக்டர்கள், 23 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி கமிஷனர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள், 14 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், ஒரு மாவட்ட கல்வி அலுவலர், ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு படை) என மொத்தம் 90 காலிப் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி என்ன?, என்ன மாதிரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? உடற்தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்ன? தேர்வு கட்டணம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/english/04-2024-GRP1-ENG-.pdf என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்