'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்'- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-06-17 09:05 GMT

சென்னை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய நடிகர் விஜய், "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்... நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.

நடிகர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது" என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்