தேடல்கள், முயற்சிகள் இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம்

காடையாம்பட்டி அருகே நடந்த "நான் முதல்வன்" திட்டம் குறித்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது, தேடல்கள், முயற்சிகள் இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம் என்றார்.

Update: 2023-01-07 19:30 GMT

'நான் முதல்வன்' திட்டம் குறித்த நிகழ்ச்சி:


மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

சேலம், ஜன.8-

காடையாம்பட்டி அருகே நடந்த "நான் முதல்வன்" திட்டம் குறித்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது, தேடல்கள், முயற்சிகள் இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம் என்றார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

காடையாம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

"நான் முதல்வன்" எனும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தங்களின் மேல்படிப்புகளில் எதைப் படிப்பது, எங்கு படிப்பது போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது. நானும் அரசு பள்ளியில் பயின்று கலெக்டராக தற்போது உயர்ந்துள்ளேன். தேடல்கள் மற்றும் முயற்சிகள் இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம்.

நல்லமுறையில்...

சென்னையில் இருந்து வந்துள்ள கல்வியாளர் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதும் முழு நேரமாக பல்வேறு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். சேலத்தில் நடத்தப்படும் இந்த வழிகாட்டு நிகழ்ச்சியை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சென்னை கல்வியாளர் நெடுஞ்செழியன், 'நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கம் குறித்தும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், தனியார் பொறியியல் கல்லூரி தலைவர் நிதிஷ் ஹரிஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்