கொசுமருந்து தெளிக்க நடவடிக்கை-திருப்புவனம் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

கிராமங்களில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்புவனம் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2022-12-29 18:36 GMT

திருப்புவனம்

கிராமங்களில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்புவனம் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

யூனியன் சாதாரண கூட்டம்

திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் அதன் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். மன்றப் பொருள் தீர்மானங்களை மேலாளர் கார்த்திகா வாசித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள், மின்சாரம், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யூனியன் தலைவர் சின்னையா பேசும்போது, பள்ளி மாணவர்களின் நேரத்தை கணக்கிட்டு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொசு மருந்து

கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் ஈஸ்வரன்: கொரோனா, டெங்கு மறுபடியும் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே மஸ்தூர் பணியாளர்கள் கிராமங்கள் முழுவதும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ராமு: மதிய நேரத்தில் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையம் செல்ல சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த நேரத்தில் பொதுமக்களை காக்க வைக்காமல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

கவுன்சிலர் சுப்பையா: கிராம பகுதிகளில் பல சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. அதிகாரிகள் அனைத்து சாலைகளையும் பார்வையிட்டு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்பு திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் சமூக நல விரிவாக்க அலுவலராக வேலை பார்த்த மலர்க்கொடி என்பவர் பணி மாறுதலில் மதுரை மாவட்டம் செல்வதால் அவரை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. முடிவில் 2023-ம் வருடம் பிறக்க இருப்பதை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் யூனியன் தலைவர், துணை தலைவர், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்