முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று வந்து 1½ ஆண்டுகள் ஆகிறது; ரூ.6,100 கோடி முதலீடு என்ன ஆனது? அண்ணாமலை கேள்வி

‘துபாய் பயணம் சென்று வந்து 1½ ஆண்டுகள் ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னபடி ரூ.6,100 கோடி முதலீடு என்ன ஆனது?', என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-08-03 21:15 GMT

 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

30 சதவீத கமிஷன்

ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, தற்போது வரை அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்காமல் செயலற்று போயிருக்கிறது. துபாய் சுற்றுலா சென்று வந்து 1½ ஆண்டுகள் ஆகிறது. அவர் சொன்னபடி ரூ.6,100 கோடி முதலீடு என்ன ஆனது? என்று தெரியவில்லை.

கடந்த நிதி ஆண்டை விட 2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்தில் நேரடி அன்னிய முதலீடு 27.7 சதவீதம் குறைந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க வருவோரிடம் 30 சதவீத கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால், தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்க்கின்றன.

காரணம் என்ன?

சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், 6,000 பேர் வேலைவாய்ப்புகள் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பை அவர் உடனடியாக திரும்பப் பெற்றார். தற்போது கர்நாடகா மாநில அரசுடன் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.4,963 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அம்மாநில மந்திரி பிரியங்க் கார்கே அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அந்த முதலீடுதான் கர்நாடக மாநிலத்துக்கு கைமாறி இருக்கிறதா? தமிழகத்தில் ரூ.1,600 கோடி என்று அறிவித்துவிட்டு, தற்போது கர்நாடகாவில் அதை விட 3 மடங்கு அதிகமாக முதலீடு செய்ய காரணம் என்ன? இதை தெளிவுபடுத்த வேண்டும்.

இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள்

எல்லா வளங்களும், இளைஞர் சக்தியும் இருந்தும், ஊழல் ஆட்சியால் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், வருகிற முதலீடுகளையும் தவறவிட்டு, வெறும் சாராய விற்பனையும் சாதித்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்படும் தி.மு.க. அரசால் தமிழகத்துக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தவித பயனும் இல்லை.

எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றி கொண்டிருக்க முடியும்? விரைவில் இளைஞர்கள் தமிழக அரசை கேள்வி கேட்க தொடங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்