சித்தோடு அருகே மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசம்; 11 ஆடுகளை கடித்து கொன்றது

சித்தோடு அருகே மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசம்; 11 ஆடுகளை கடித்து கொன்றது

Update: 2023-03-19 21:24 GMT

பவானி

சித்தோடு அருகே மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டு 11 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.

11 ஆடுகள் சாவு

ஈரோடு மாவட்டம் சித்தோடு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 56). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வெங்கடாஜலம் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்த வெங்கடாஜலம் வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு கடித்து குதறப்பட்டு குடல் சரிந்த நிலையில் 8 ஆடுகளும், கழுத்து பகுதியில் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் 3 ஆடுகளும் என மொத்தம் 11 ஆடுகள் ெசத்து கிடந்தன, அதைப்பார்த்து விவசாயி வெங்கடாஜலம் அதிர்ச்சி அடைந்தார்.

ரத்த காயத்துடன்

பின்னர் அவர் பட்டியின் உள்ளே சென்று பார்த்த போது மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் கால்கள் மற்றும் கழுத்து பகுதிகளில் கடிபட்ட நிலையில் ரத்த காயத்துடன் காணப்பட்டன. இரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த மர்மவிலங்குகள் ஆடுகளை வேட்டையாடியது தெரியவந்தது. உடனே அவர் இதுபற்றி சித்தோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் மற்றும் உதவியாளர்கள் அங்கு சென்று, படுகாயத்துடன் கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். தகவல் கிடைத்து வனத்துறையினரும், சித்தோடு போலீசாரும் அங்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

கால்தடங்கள் பதிவு

மேலும் வனத்துறையினர் அங்கு பதிவான பல்வேறு விதமான கால்தடங்களை பதிவு செய்தனர். ஆய்வுக்கு பின்னரே ஆடுகளை வேட்டையாடியது எந்த விலங்கு என்று தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 'கடந்த ஒரு வார காலமாக சித்தோடு பகுதிக்குள் மர்ம விலங்குகள் புகுந்து இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளையும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கொன்றுள்ளது.

மனிதர்களை இந்த மர்ம விலங்குகள் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் முன்பு அதை பிடிக்கவும், இதுவரை இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவி வழங்கவும் வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்