ஊஞ்சலூர் அருகே பண்ணைக்குள் புகுந்து மரநாய்கள் அட்டகாசம்; 500 கோழிகளை கடித்து கொன்றன

ஊஞ்சலூர் அருகே பண்ணைக்குள் புகுந்த மரநாய்கள் 500 கோழிகளை கடித்து கொன்றன.

Update: 2023-03-17 21:07 GMT

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே பண்ணைக்குள் புகுந்த மரநாய்கள் 500 கோழிகளை கடித்து கொன்றன.

மேலும் ஒரு சம்பவம்

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் இச்சிப்பாளையம் அருகே உள்ள பெருமாள் கோவில்புதூர், வாய்க்கால் செட் பகுதிகளில் கடந்த மாதம் 27-ந் தேதி அன்று இரவு பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகள், கோழிகளை கடித்து குதறி கொன்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குள் புகுந்த மரநாய்கள் அங்குள்ள கோழிகளை கடித்து குதறி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோழிகள்

இச்சிப்பாளையம் கிராமம் மேட்டரை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). விவசாயி. இவர் தனது வீட்டில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இங்கு 5 ஆயிரம் கோழிகளை அடைத்து வைத்து அவற்றுக்கு தீவனம் வைத்து பராமரிக்கிறார்.

அதேபோல் சரவணன் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தனது 2 கோழிப்பண்ணைகளில் உள்ள 5 ஆயிரம் கோழிகளுக்கு தீவனங்கள் வைத்து பூட்டி விட்டு வீட்டு்க்கு சென்று விட்டார்.

நாய்கள் கொன்றன

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கோழிகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் திடுக்கிட்டு் எழுந்தனர். பின்னர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு சரவணனின் பண்ணையை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வலை சேதப்படுத்தப்பட்டு் கிடந்தது. உள்ளே பார்த்தபோது அங்கு 4 மரநாய்கள் நின்று கொண்டு அங்குள்ள கோழிகளை கடித்து குதறி கொண்டிருந்தன.

ஆட்களை பார்த்ததும் பண்ணைக்குள் இருந்த மரநாய்கள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டன. இதுபற்றி பொதுமக்கள் செல்போன் மூலம் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். மரநாய்கள் கடித்ததில் பண்ணையில் இருந்த 500 கோழிகள் இறந்து கிடந்தன.

மரநாய்கள்

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டனர். மேலும் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட வனத்துறை வெங்கம்பூர் பகுதி காவலர் மகேஸ்வரி, தாசில்தார் மகேஸ்வரி, கரட்டாம்பாளையம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று இறந்து கிடந்த கோழிகளை பார்வையிட்டு சென்றனர்.

பண்ணைக்குள் மரநாய்கள் புகுந்து 500 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்