அம்மாபேட்டை பகுதியில் தொடர்ந்து ஆடுகளை கொல்லும் வெறிநாய்கள்; விவசாயிகள் வேதனை

அம்மாபேட்டை பகுதியில் தொடர்ந்து ஆடுகளை கொல்லும் வெறிநாய்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

Update: 2022-12-02 21:29 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பகுதியில் தொடர்ந்து ஆடுகளை கொல்லும் வெறிநாய்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

வெறிநாய்கள்

அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் (வயது 45) என்பவர் அப்பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார்.

கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள பட்டியின் வெளிப்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

அன்று நள்ளிரவு 1 மணி அளவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதை கேட்டதும் சக்திவேல் வெளியே வந்து பார்த்தார். அப்போது 16 செம்மறி ஆடுகள் கழுத்து, முதுகு, வயிறு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன.

இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும், அம்மாபேட்டை போலீசாரும் விசாரணை செய்தனர். அதில் ஆடுகளை கொன்றது வெறிநாய்கள் என்று தெரியவந்தது.

வேதனை

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக வெறிநாய்களின் அட்டகாசம் மீண்டும் அம்மாபேட்டை அடுத்துள்ள குருவரெட்டியூர் பகுதியில் தொடங்கியுள்ளது. கரடிப்பட்டியூர், கோனார்பாளையம், பலேரிக்காடு, காந்திநகர் போன்ற பகுதிகளில் உத்திரசாமி, சுதாகர், நாகராஜ், ராமநாதன்,, சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 18 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அதிகாரிகளும் ஆடுகளை வேட்டையாடும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்