ஓசூர் அருகே பயங்கரம்:கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியைஉறவினருடன் கைது

Update: 2023-08-15 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை, உறவினருடன் கைது செய்யப்பட்டார்.

அங்கன்வாடி மைய ஆசிரியை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 39). இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜோதி, அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40), லாரி டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசுக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

கட்டையால் அடித்தனர்

இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ், தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.

சாவு

அதே நேரத்தில் வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து வெங்கடேசை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய உறவினர் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பேரிகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்