எல்லை மீறும் இலங்கை அரசின் அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மூவருக்கு இலங்கை கோர்ட்டு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர் ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும், மீண்டும் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.
நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு இவ்வாறு செய்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.