குடவாசல் அருகே ஆனந்தவள்ளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

குடவாசல் அருகே ஆனந்தவள்ளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-24 06:52 GMT

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அனந்தம்புலியூரில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஆனந்தவள்ளீ ஈஸ்வரர் திருக்கோவில் திருப்பணி வேலைகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்றது.

தற்போது கோவிலில் அனைத்து வேலைகளும் நிறைவுபெற்று இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் , மகா லட்சுமி ஹோமம் தொடர்ந்து யாக பூஜைகளும் கேள்விகளும் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு முதல்கால பூஜையும், மறுநாள் 23-ஆம் தேதி இரண்டாவது கால யாகசாலை பூஜையும் வேதபாராயணம், திருமுறை பாராயணமும் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு ஆனந்த விநாயகர் ஆலயத்திலிருந்து யாகசாலை பூஜைக்காக கோ பூஜை, அஸ்வ பூஜை, கன்யா பூஜை பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 4-வது கால பூஜை துவங்கி மஹா பூர்ணாகுதி நடைபெற்று கங்கை, யமுனை, காவேரி, பிரம்மபுத்திரா, வைகை, போன்ற புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணியதீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் பூஜை செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று சரியாக 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம வாசிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்