மேட்டூர் அருகே நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை
மேட்டூர் அருகே நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூதாட்டியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேட்டூர்:
கழுத்தை அறுத்து கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே ஏழுபரனைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் மல்லிகா கொளத்தூர் பகுதியில் வசித்து வருகிறார், பிரகாஷ் திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டுக்கு அருகே உள்ள சாலை கொட்டகையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டு வாசல் அருகே வெளியில் தூங்கினார். நேற்று காலை ராமசாமி வீட்டுக்கு வந்தபோது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் மூதாட்டி கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரமணி மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கோவை மண்டல ஐ.ஜி பவானி ஈஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு சங்கீதா, சங்ககிரி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி சென்ற நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அத்தாயம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தினமும் இரவில் அத்தாயம்மாள் வீட்டில் தனியாக தூங்குவதை நோட்டமிட்ட மர்ம கும்பல் இரவு வீட்டுக்குள் புகுந்து அவரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
எனினும் அவர் நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நகை, பணத்தை கொள்ளையடித்து மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.