அரசு டவுன் பஸ்சில் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு அடம் பிடித்த மூதாட்டி

ஓசி வேண்டவே வேண்டாம் என்று கூறி அரசு டவுன் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு மூதாட்டி அடம் பிடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Update: 2022-09-29 20:58 GMT

கோவை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும், பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் இலவசம் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தினமும் ஏராளமான பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவையில் ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர், எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம், நான் ஓசியில் செல்ல விரும்பவில்லை, பணத்தை வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடு என்று கேட்டு கண்டக்டரிடம் அடம் பிடித்தார். அதன் விவரம் வருமாறு:-

70 வயது மூதாட்டி

கோவை காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மாநாயக்கனூர் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று காலை 9.50 மணிக்கு சென்றது. அதில் வால்பாறையை சேர்ந்த வினித் (வயது 28) என்பவர் கண்டக்டராக இருந்தார். மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது, குரும்பபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி துளசியம்மாள் (70) என்பவர் பஸ்சில் பாலத்துறைக்கு செல்ல ஏறினார்.

அவரிடம் கண்டக்டர், இலவச டிக்கெட்டை கொடுத்தார். அதற்கான பணத்தை கண்டக்டரிடம் மூதாட்டி கொடுத்தார். உடனே அவர் பணம் வேண்டாம்.... இலவசம்தான் என்று கூறினார். அதற்கு அந்த மூதாட்டி காசு இல்லாம எனக்கு டிக்கெட் வேண்டாம், நான் ஓசியில் வரமாட்டேன் என்றார்.

ஆனாலும் கண்டக்டா் நான் காசு வாங்க மாட்டேன் என்றார். உடனே அந்த மூதாட்டி காசு வாங்கலனா எனக்கு டிக்கெட் வேண்டாம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி நான் ஓசியில வரமாட்டேன், பிரீயா தமிழ்நாடு முழுவதும் போகட்டும் நான் ஓசில வர மாட்டேன், காசு கொடுத்துதான் வருவேன் என்று வாக்குவாதம் செய்ததுடன், இந்தா காச பிடி என்று கண்டக்டர் கையில் தன்னிடம் இருந்த ரூ.20-ஐ வலுக்கட்டாயமாக திணித்தார்.

வீடியோ வைரலானது

இதனால் கண்டக்டர் வேறு வழி இ்ல்லாமல் அந்த பணத்தை பெற்று விட்டு ரூ.5-க்கு டிக்கெட் கொடுத்துவிட்டு, மீதம் ரூ.15-ஐ அந்த மூதாட்டி கையில் கொடுத்தார்.

இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சக பயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்