கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
நிரந்தர பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நிரந்தர பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
சீர்காழி தாலுகா வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா (வயது 70). நேற்று இவர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிரந்தர பட்டா வழங்க வேண்டும்
கலெக்டர் அலுவலகத்தில் சாரதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் ராஜகோபாலுக்கு அரசு அதிகாரியால் நிலம் வழங்கப்பட்டது. தனது கணவர் இறந்த பிறகு அந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் தயார் செய்து தனது உறவினர்கள் பெயரில் பட்டா பெற்றுள்ளார்.
எனவே அந்த பட்டாவை ரத்து செய்து தனது பெயரில் நிரந்தர பட்டா வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.