மனைவி கண் முன் கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவர்

வேலூர் அருகே மனைவி கண்முன் கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2023-05-29 12:11 GMT

குட்டையில் மூழ்கிய முதியவர்

வேலூரை அடுத்த சித்தேரி கணேசபுரத்தை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி புஷ்பா. காலை 8.30 மணியளவில் புஷ்பா அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார். அவருடன் அபிமன்னனும் சென்றுள்ளார். கல்குவாரி கரையோரம் புஷ்பா துணிகள் துவைத்து கொண்டிருந்தார். அப்போது அபிமன்னன் கல்குவாரி குட்டையில் இறங்கி குளிக்க தொடங்கினார்.

அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் தண்ணீரின் அடியில் சிறிதுநேரம் மூழ்கியும், பின்னர் தண்ணீருக்கு மேலேயும் வந்துள்ளார். அப்போது தண்ணீருக்குள் சென்றவர் வெகுநேரமாகியும் மேலே வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையம், வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேடும் பணி தீவிரம்

அதன்பேரில் வேலூர் தீயணைப்பு போக்குவரத்து அலுவலர் செல்வமூர்த்தி தலைமையிலான வீரர்கள் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறிய படகு மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது. சுமார் 8 மணிநேர தேடுதலுக்கு பின்னரும் அபிமன்னனை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுகுறித்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 18 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு வருவதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். அபிமன்னனுக்கு நன்றாக நீச்சல் தெரியும். ஆனால் அவருக்கு வலிப்பு நோய் அடிக்கடி வரும். அதனால் அபிமன்னன் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்ததாக அரியூர் போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்