கடற்கரையில் ஒதுங்கிய இரும்பு பேரல்
கன்னியாகுமரி கடற்கரையில் ஒதுங்கிய இரும்பு பேரலை கைப்பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடற்கரையில் ஒதுங்கிய இரும்பு பேரலை கைப்பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி கடற்கரை
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிப்பார்்கள்.
கன்னியாகுமரியின் கடல் பகுதியில் தெற்கு திசையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடம் உள்ளது. இந்த வழியாக பல நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் சென்று வருவது வழக்கம். இதனால் இந்த சர்வதேச கப்பல் வழித்தடத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இரும்பு பேரல்
இந்தநிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று காலையில் ஒரு இரும்பு பேரல் ஒதுங்கியது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்். உடனே இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் துரைசிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பேரலை மீட்டனர். அதை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அதில் வெடி பொருட்கள் இல்லை என்பது உறுதியானதை தொடர்ந்து போலீசார் பேரலை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் கப்பலில் பயன்படுத்தும் 175 லிட்டர் ஆயில் இருந்தது தெரிய வந்தது. கன்னியாகுமரி கடல் மார்க்கமாக தினசரி ஏராளமான கப்பல்கள் சென்று வருகின்றன. அப்படி சென்ற கப்பலில் இருந்து இந்த பேரல் தவறி விழுந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இது தொடர்பாக கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி கடற்கரையில் இரும்பு பேரல் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.