வேலூரில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூரில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்,
வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எனினும் மாலை வேளைகளில் வானம் மேகக் கூட்டத்துடன் காணப்படும். இருந்தபோதிலும் இரவில் புழுக்கத்தால் மக்கள் தவித்து வந்தனர். இன்று பகலில் வெயில் வாட்டியது. இதனால் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது.
பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பல்வேறு இடங்களில் மண்ணுடன் கூடிய புழுதி காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மாலை 6:30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.