தமிழகத்தில் பரவும் காய்ச்சலை கண்டறிய வல்லுனர் குழு அமைக்க வேண்டும்-முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
தமிழகத்தில் பரவும் காய்ச்சலை கண்டறிய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் சாரல் விழாவில் பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மறைப்பது வேதனைக்குரியதாக உள்ளது. இதுதவிர டெங்கு, இன்புளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலும் பரவி வருகிறது. பொதுமக்கள், குழந்தைகள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக ஒரு வல்லுனர் குழுவை அமைத்து எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த காய்ச்சல்கள் பரவி வருகிறது என்று ஆய்வு செய்து, அதற்கு ஏற்றார் போல் சிகிச்சையையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது என்பதை பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களே குற்றம் சாட்டி வருகின்றனர். அமைச்சர் இதனை மறுப்பதை விடுத்து மக்கள் நலன் கருதி உடனடியாக மருந்து, மாத்திரைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக காய்ச்சல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுமுறை விட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி வருகிறார். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மர்ம காய்ச்சல் என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்து விட முடியாது. அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளை அமைத்து, குழந்தைகளுக்கான காய்ச்சல் வார்டுகளை அமைத்து அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.