பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-31 20:37 GMT

திருப்பத்தூர்,

ஆம்பூர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி வந்துள்ளார். அவருடைய உரையாடல்களை டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து, செல்போன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனாஸ் அலி (வயது 22) என்பதும், இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக இது பற்றி சென்னையில் உள்ள உளவுத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வேலூர் திருப்பத்தூர், திருச்சி நகரங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உளவுத்துறை போலீசார் ஆம்பூருக்கு வந்தனர்.

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு

அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் நீலிக்கொல்லை பகுதியில் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர் அனாஸ் அலியை பிடித்தனர். அவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்புகளி‍ல் சென்னையில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தனர்.

அனாஸ் அலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் செயல்படும் குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வந்ததுடன், அந்த அமைப்புகள் இயங்கி வரும் சிரியா, மொராக்கோ என பல நாடுகளில் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது என போலீசார் கூறினர்.

கைது

தொடர்ந்து சுமார் 15 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் அனாஸ் அலியை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சேலத்தில் ஆசிக், பெங்களூருவில் அப்துல்அலிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சேலத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டனரா என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்