கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2023-08-27 22:22 GMT

லால்குடி:

தனியார் நிறுவன ஊழியர்கள்

விருதுநகர் ஆமத்தூரை சேர்ந்த அந்தோணி குரூசின் மகன் ஜான்போஸ்கோ(வயது 28). இவரும், கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த தர்மன் மகன் தமிழ்ச்செல்வன்(29), விருதுநகர் சிவகாசியைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சங்கர்(24), சிவகங்கை தேவகோட்டையை சேர்ந்த பாலுச்சாமியின் மகன் சிவக்குமார் ஆகியோர் திருச்சியை அடுத்த துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் தங்கி, வேலை செய்து வந்தனர்.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் அவர்கள் 4 பேரும் கல்லணைக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் மதியம் கல்லணைக்கு சென்று ஜாலியாக சுற்றி பார்த்தனர். பின்னர், அங்கு குளிக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர்.

ஆற்றில் மூழ்கினார்

லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் பகுதியில் கிளிக்கூடு செல்லும் தற்காலிக மண் சாலையின் அருகில் செல்லும் ெகாள்ளிடம் ஆற்றை பார்த்ததும், அவர்களுக்கு குளிக்கும் ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து முதலில் ஜான் போஸ்கோ ஆற்றில் இறங்கி குளித்தார்.

அப்போது, அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட தமிழ்ச்செல்வன் ஆற்றில் இறங்கி ஜான் போஸ்கோவை மீட்க முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கினார். இதையடுத்து சங்கர், சிவக்குமார் ஆகியோர் ஆற்றில் இறங்கி 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பிணமாக மீட்பு

இது பற்றி தகவல் அறிந்த லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். துணை சூப்பிரண்டு அஜய் தங்கம், லால்குடி தாசில்தார் விக்னேஷ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான் போஸ்கோவை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்