கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய எலக்ட்ரீசியன்... கண்டித்த மனைவி... அடுத்து நடந்த விபரீதம்

எலக்ட்ரீசியன் கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி சேலத்துக்கு சென்றார்.;

Update:2024-07-20 04:37 IST

சேலம்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலனியை சேர்ந்த ஜவகர் மகன் மணிகண்டன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களது ரகசிய உறவு மணிகண்டன் வீட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி சேலத்துக்கு சென்றார். மணிகண்டனின் கள்ளக்காதலியின் உறவினர்கள் எடப்பாடி அருகே வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். எனவே மணிகண்டனும், அவரது கள்ளக்காதலியும் வளையசெட்டியூரில் தங்கினர்.

இதற்கிடையே கணவரை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி உறவினர்கள், குடும்பத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். பின்னர் சேலம் மாவட்டத்தில் தங்கி இருப்பதை அறிந்து வளையசெட்டியூருக்கு சிவரஞ்சனி வந்தார். அங்கு கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த மணிகண்டனை தன்னோடு வரும்படி மனைவி அழைத்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கண்டித்ததாகவும் தெரிகிறது.

அங்கிருந்து திடீரென வெளியேறிய மணிகண்டன் பூலாம்பட்டி அருகே வாய்க்கால் கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

மணிகண்டன் தற்கொலை தொடர்பாக பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியதை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்