கலெக்டர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி தர்ணா

கலெக்டர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர்

Update: 2022-09-19 18:45 GMT

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 86). இவரது மனைவி சாரதாம்பாள்(76). இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார். தனக்கென சிறிது நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்ட தங்கசாமி, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் தங்கசாமியின் மகன்களில் ஒருவர் தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.

கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பூர் போலீஸ் நிலையம் மற்றும் அதிகாரிகளிடம் தங்கசாமி புகார் அளித்தார். 4 மகன்கள் இருந்தும் யாரும் அவர்களை பராமரிக்க முன்வராத நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் நேற்று காலை மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து மனு கொடுக்க கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது அந்த வயதான தம்பதியினர், தங்களது வாழ்வாதாரத்திற்காக மகனிடம் இருந்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்லாவிட்டால் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர். இதையடுத்து, அந்த மனுவை உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்த கலெக்டர் லலிதா, அந்த மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்