லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-26 05:51 GMT

நீர்வளத்துறை அதிகாரி

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவர், தரமணியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர், அலுவலகத்தில் இருந்தபோது காரில் வந்து இறங்கிய மர்மநபர், "நான் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ். நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்து உள்ளது. அதுபற்றி விசாரிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அசோகன், "நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" என்றார். எனினும் அந்த நபர்கள், அசோகனின் அறையில் சோதனை செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை அழைத்துச்சென்று சோதனை செய்தனர். பின்னர் மீண்டும் அசோகனை காரில் அழைத்து சென்றார்.

போலி நபர்கள்

ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என வந்தவர் மீது சந்தேகம் அடைந்த அசோகனின் மனைவி, போலீசுக்கு தகவல் கொடு்த்தார். உடனடியாக போலீசார், அசோகனின் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். உடனே காரில் இருந்த அசோகனை நடுவழியில் இறக்கி விட்டு, திங்கட்கிழமை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் சென்று விசாரித்த போது, வந்தவர் போலியான நபர் என்பதும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்து அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தியதும், போலீசார் போன் செய்ததும் தன்னை இறக்கிவிட்டு தப்பிச்சென்றதும் அசோகனுக்கு தெரிந்தது.

தொடரும் சம்பவம்

இதுபற்றி அசோகன் அளித்த புகாரின்பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

இதேபோல் கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றும் ராஜன்பாபு என்பவரிடமும் மர்மநபர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தொடரும் இந்த சம்பவத்தால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்