காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.டி.எம்.எந்திரம் தீப்பிடித்ததால் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம்.எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் வேதாச்சலம் நகர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இங்கு 2 ஏ.டி.எம்.எந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று எந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஏ.டி.எம்.மில் எந்திரம் தீப்பிடித்து அதில் இருந்து புகை வருவதை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். இதனால் அச்சமடைந்து உடனடியாக அங்கிருந்து பதறியடித்து ஓடினார். இது தொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவர உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை சரிபார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறத்தில் உள்ள மின் இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மேலும் தீ பரவாதவாறு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக ஏ.டி.எம். எந்திரம் உள்ளே இருந்த பணம் பத்திரமாக தப்பியது. நகரின் மையபகுதியில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.