ராணியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கவில்லை

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் இயங்காததால் குறைந்த விலையில் உணவு வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-02-17 19:05 GMT

ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இதில் காலையில் இட்லி 1 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது. பொதுமக்களின் வருகைக்காக சாம்பார், ரசத்துடன் சாப்பாடு ரூ.10-க்கும் கொடுக்கப்படுகிறது.

குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவினை மருத்துவமனைக்கு வருபவர்களும், வெளியில் இருந்து பொதுமக்கள் வந்தும் வாங்கி செல்வது உண்டு.

அம்மா உணவகம் இயங்கவில்லை

இந்த நிலையில் ராணியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் கடந்த 5 நாட்களாக உணவு தயாரித்து விற்கப்படவில்லை. உணவகம் திறந்திருந்தாலும் அதில் சமையல் எதுவும் நடைபெறாமல் இருந்துள்ளது. சாப்பாட்டிற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்றும் அம்மா உணவகம் இயங்கவில்லை.

இந்த உணவகத்தையே நம்பியுள்ள பொதுமக்கள் மிகவும் தவித்தனர். இந்த நிலையில் அம்மா உணவகம் இயங்காதது குறித்து தகவல் அறிந்த பா.ஜனதாவினர் அங்கு வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கினர். அம்மா உணவகத்தை தொடர்ந்து இயங்க வலியுறுத்தினர்.

சிலிண்டர், மளிகை பொருட்கள்

அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கப்படாததற்கான காரணம் குறித்து அங்கிருந்த பணியாளர்கள் கூறுகையில், ''கடந்த 5 நாட்களாக சிலிண்டர் இல்லை. அரிசி இருந்தாலும் சாப்பாட்டிற்கான மளிகை பொருட்களை நகராட்சி நிர்வாகம் வாங்கி தரவில்லை. இந்த அம்மா உணவகத்தில் தினமும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனையாகுகிறது. இந்த நிலையில் தினமும் ரூ.3,600-க்கு உணவு விற்பனை செய்ய வேண்டும். அந்த தொகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என நகராட்சி தரப்பில் கூறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு வியாபாரம் நடைபெறுவதில்லை. மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 11 பெண்கள் பணியில் இருந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் பொருட்கள் வாங்கி கொடுத்ததும் சமையல் செய்து உணவு விற்பனை செய்யப்படும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்