மறுவாழ்வு இல்லத்துக்கு ஆம்புலன்ஸ்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்துக்கு பாலமுருகனடிமை சுவாமி ஆம்புலன்ஸ் வழங்கினார்.
திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இந்த இல்லத்துக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவும் உள்ளங்கள் அமைப்பு ரமேஷ் வரவேற்றார்.
ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு உதவும் உள்ளங்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு பயன்படும் வகையில் ஆம்புலன்சை வழங்கினார். மேலும் 15 மூட்டை அரிசிகளையும் அவர் கலெக்டர் முன்னிலையில் வழங்கினார். அதைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு ஆசி வழங்கினார். அங்கு அவர் எழுதி காட்டும் போது 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்துள்ளேன். அதன் பின்னர் நான் இப்போது வருகிறேன். அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் விஜயா கேலக்ஸி மதியழகன், நல்லாசிரியர்கள் துரைமணி, சுந்தரம், எஸ்.பி.திருமலை, எழிலசரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.