ஆடி அமாவாசையன்று சதுரகிரியில் அன்னதானம் வழங்க அனுமதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சதுரகிரி வரும் பக்தர்களுக்கு ஆடி அமாவாசையன்று அன்னதானம் வழங்க அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-10 20:19 GMT


சதுரகிரி வரும் பக்தர்களுக்கு ஆடி அமாவாசையன்று அன்னதானம் வழங்க அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சதுரகிரியில் அன்னதானம்

விருதுநகரை சேர்ந்த ஜனார்த்தனன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக ஆடி அமாவாசை அன்று இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

நாங்கள் பல ஆண்டுகளாக மலைக்கு மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் அருகில் வெள்ளைப்பாறை மடம் நடத்தி வந்தோம். தற்போது அங்கு மடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களின் நலன் கருதி வருகிற 14-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை மலைக்கு மேல் கோவில் பகுதியில் அன்னதானம் வழங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி அதிருப்தி

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சதுரகிரி மலைப்பகுதியில் வனத்தை பாதுகாக்கும் வகையில் தனியார் மடங்கள் செயல்பட தடை விதித்ததற்கு ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கோவில் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது மனுதாரர் கோவில் பகுதியில் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதித்தால் பல்வேறு பக்தர்கள் தங்களுக்கும் அனுமதி கோருவார்கள். எனவே அனுமதிக்கக்கூடாது என வாதாடினார்.

இதை கேட்ட நீதிபதி, இந்து கோவில் வழிபாட்டு முறைகளில் அன்னதானமும் முக்கியமான ஒன்று. பக்தர்கள் இன்றி கோவில் நிர்வாகம் மட்டுமே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இயலாது. இதுபோன்ற நடவடிக்கைகள் கோவிலில் இருந்து பக்தர்களை அந்நியப்படுத்தும் என அதிருப்தி தெரிவித்தார்.

ஒருநாள் மட்டும் அனுமதி

பின்னர் மனுதாரர் வக்கீல் முரளி பிரேம்குமார் ஆஜராகி, 7 கிலோ மீட்டர் தூரம் மலையில் நடந்து செல்லும் பக்தர்கள் சோர்ந்து விடுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையான உணவை வழங்குவது அவசியம். ஆனால் அறநிலையத்துறை சார்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. அன்னதானம் வழங்குவதால் ஏற்படும் குப்பைகளை மலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் வருகிற 16-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாரர் மடம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்