ரெயில் நிலையங்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.11½ கோடி ஒதுக்கீடு

ரெயில் நிலையங்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.11½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2023-09-14 22:15 GMT

ரெயில் நிலையங்கள்

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 18 ரெயில் நிலையங்கள் உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில் நிலையங்கள் சீரமைக்கப்படுகிறது. இந்தநிலையில் 2-வது கட்டமாக திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் அரியலூர் ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.

சீரமைப்பு

அதன்படி லால்குடி ரெயில் நிலையம் ரூ.6.27 கோடி மதிப்பிலும், அரியலூர் ரெயில் நிலையம் ரூ.5.24 கோடி செலவிலும் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, இந்த பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளான லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்த வசதி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்