கூட்டணி, தொகுதி பங்கீட்டை தலைமை பார்த்துக் கொள்ளும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை; யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-11-26 06:28 GMT

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும்; 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம். இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை; யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவில் சேலம் இளைஞரணி மாநாடு இருக்க வேண்டும். 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக திமுக இளைஞரணி திகழ்கிறது. இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கின்றன.

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள், பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்