மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் - வைகோ வேண்டுகோள்

மணப்பாறையில் அனைத்து ரெயில்களையும் நிறுத்த வலியுறுத்தி வரும் 30ம் தேதி மதிமுக சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என வைகோ கூறியுள்ளார்.

Update: 2023-01-28 06:37 GMT

சென்னை,

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரெயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர, தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ செட்டியாரால் தொடங்கப் பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும், தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அண்மையில் தொடங்கப்பெற்ற சிப்காட் தொழிற்பேட்டையும் மணப்பாறையில் உள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 5,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மணப்பாறை, திருச்சியிலிருந்து 45 கிமீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கிமீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கிமீ-க்கு இடையில் மணப்பாறை ரெயில் நிலையம் மட்டுமே உள்ளது.

அகல ரெயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணி ஐயர் தயாரித்து மணப்பாறை ரெயில் நிலைய டாலில் விற்கப்பட்ட மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் காந்தி மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, ரெயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று காந்தி பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை ரெயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல்வெட்டாக நிலைத்து நிற்கின்றது.

இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரெயில்கள் நின்று செல்கின்றன. திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ரெயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசியதும், அன்றைய தினமே இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்கும் என்று ரெயில்வே மந்திரி அறிவித்ததும் நினைவு கூறத்தக்கது.

அதேபோல, 2018-ல் மதிமுக நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை துரித ரெயில் மணப்பாறையில் நின்று செல்கின்றது. இருவழி நிறுத்தமாக இருந்த பாண்டியன் விரைவு ரெயில், தற்போது மதுரை - சென்னை ஒருவழித் தடத்தில் மட்டுமே நின்று செல்கிறது.

எனவே சென்னை - மதுரை ரெயிலையும்,வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம் - திருப்பதி துரித ரெயில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகின்ற அந்த்யோதயா உள்ளிட்ட மணப்பாறை வழியாகச் செல்லும் அனைத்து ரெயில்களையும் மணப்பாறையில் நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

தற்சமயம், மணப்பாறை ரெயில் நிலையத்தில் மாதம் ரூ.15 லட்சம் பயணச்சீட்டு வருமானம் கிடைக்கின்றது. மணப்பாறையில் அனைத்து ரெயில்களையும் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடம் தற்போது வலுத்து வருகின்றது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 30ம் தேதி திங்கள்கிழமை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதிமுக சார்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர்கள் ஆ.துரைராஜ், ப.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ரெயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.

ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய ரெயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்