பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்;
கள்ளக்குறிச்சி
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியதாவது:-
27 இடங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு பணி, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினர்களை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட வேண்டும். பேரிடர் காலங்களில் அதிகம் பாதிக்கக்கூடிய 6 இடங்கள், மிதமான பாதிப்பு 2 இடங்கள், குறைவான பாதிப்பு 19 இடங்கள் என மொத்தம் 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
பேரிடர் ஒத்திகை தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேர சுழற்சி பணி மேற்கொள்ள அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறைகளையும் ஏற்படுத்தி அதன் விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புயல், மழை, வெள்ளம் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிக்கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், புயல்பாதுகாப்பு மைய கட்டிடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள், ஊரணிகள், குட்டைகள், திறந்தவெளி கிணறுகள் உள்ளிட்டவைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலை உடைப்புகளில் உள்ள பழுதை தொடர்புடைய அலுவலர்கள் சரிசெய்ய வேண்டும். போதுமான அளவு மணல் மூட்டைகள், சாக்கு பைகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருந்து, உபகரணங்கள்
தீயணைப்புதுறையினர் ரப்பர் படகுகள், உயிர் காக்கும் கோட் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ உதவிகள் செய்திட போதுமான உபகரணங்கள், மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திடவும், ஜெனரேட்டர்கள், தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பழுதின்றி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பருவமழை தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறையின் தொலைபேசி எண் 04151-228801 மற்றும் 1077 மற்றும் வாட்ஸ் அப் எண் 94446 05018 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தகவல் மற்றும் புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, இணை இயக்குனர் மருத்துவ பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் வளர்மதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.