'தமிழகத்தில் மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வாரந்தோறும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சர்வதேச ஆயுர்வேத தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் செரிமானத்திற்கு உதவும் வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட தீபாவளி லேகியத்தை அவர் அறிமுகம் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரந்தோறும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.