கரூரில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை தொடங்குகிறது

கரூர் திருவள்ளுவர் ைமதானத்தில் நாளை அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்குகிறது.

Update: 2023-05-20 18:39 GMT

கூடைப்பந்து போட்டி

தனியார் நிறுவனங்கள் மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப்பும் இணைந்து நடத்தும் அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து கரூர் கூடைப்பந்து கிளப் தலைவர் வி.என்.சி. பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அகில இந்திய கூடைப்பந்து போட்டியை கரூரில் 63-ம் ஆண்டாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். இப்போட்டிகள் நாளை முதல் 27-ந்தேதி வரை 6 நாட்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெற உள்ளது. ஆண்களுக்கான போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலும், பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையிலும் நடைபெற உள்ளன.

8 அணிகள்

ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.ஒரு லட்சம் ரொக்க பரிசும், 2-ம் இடம் பெறும் அணிக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பெறும் அணிக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4-ம் இடம் பெறும் அணிக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. ஆண்கள் போட்டியில் லோனாவிலா இந்தியன் நேவி, திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., பஞ்சாப் போலீஸ், டெல்லி இந்தியன் ரெயில்வே, பெங்களூரு பரோடா வங்கி, டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ், சென்னை டி.என்.பி.ஏ., சென்னை இந்தியன் வங்கி என்று தலைசிறந்த 8 அணிகள் பங்கேற்கின்றனர்.

3 ஆயிரம் பேர் அமரக்கூடிய கேலரி

பெண்கள் போட்டியில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே, கொல்கத்தா கிழக்கு ரெயில்வே, சென்னை டி.என்.பி.ஏ. அணி, டெல்லி வடக்கு ரெயில்வே, கேரளா போலீஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும், 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் அனைத்து அணிகளுக்கும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.

இதுதவிர பல்வேறு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பார்வையாளர்கள் 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் கூடைப்பந்து கிளப் செயலாளர் முகமது கமாலுதீன், உதவி தலைவர் இந்திரமூர்த்தி, பொருளாளர் பெரியசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்