சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்

இரவு நேரங்களில் பயணிகளை வெளியே இறக்கியும், ஏற்றியும் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-16 18:45 GMT

சீர்காழி:

இரவு நேரங்களில் பயணிகளை வெளியே இறக்கியும், ஏற்றியும் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

சீர்காழியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா தளங்களான பூம்புகார், மீன்பிடி துறைமுகங்கள் பழையார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பூம்புகாருக்கு சுற்றுலா பயணிகள் பஸ்களில் சென்று வருகின்றனர்.இதேபோல் நவகிரக தலங்களான திருவெண்காடு புதன் தலம், வைத்தீஸ்வரன் கோவில், நாங்கூர் பெருமாள் கோவில், குரவலூர் உக்கிரம நரசிம்ம பெருமாள் கோவில், திருவாலி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வடரங்கம் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பயணிகளை வெளியே இறக்கி விடுகின்றன

இந்த நிலையில் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் இந்த பஸ் நிலையத்திற்குள் பெரும்பான்மையான தனியார் பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்கள் உள்ளே வராமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. இதன் காரணமாக சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் நிற்கும் பயணிகள் குறித்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து ஏற்படுகிறது

இதுகுறித்து புதிய பஸ் நிலைய வர்த்தக சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சீர்காழி பஸ் நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் வருவது கிடையாது. மாறாக பஸ் நிலையம் வெளியிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் நிற்கும் பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பஸ்கள் வெளியேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் பஸ் நிலையத்திற்குள் காத்துக்கிடக்கும் பயணிகள் அவசர அவசரமாக ஓடி சென்று பஸ்சில் ஏற வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

பயணிகளை நம்பி புதிய பஸ் நிலையத்திற்குள் ஏராளமான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. பஸ்கள் வராமல் வெளியே செல்வதால் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க சீர்காழி வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்