போலீசாரை கண்டித்து மதுப்பிரியர்கள் சாலை மறியல்

கிருஷ்ணராயபுரம் அருகே போலீசாரை கண்டித்து மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-21 18:51 GMT

சாலை மறியல்

மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிகளவு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதமாக குறைந்தபட்சம் ரூ.ஆயிரத்தில் இருந்து தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை விதிக்க விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம்- பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் லாலாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களையும், மது பாட்டில்களை வாங்கி வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுப்பிரியர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென மகாதானபுரம்- பழைய ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அவர்கள் கூறுகையில், கூலி வேலை செய்து வரும் நாங்கள் உடல் அசதியின் காரணமாக இரவு நேரத்தில் மது அருந்திவிட்டோ அல்லது மது பாட்டில்களை வாங்கிக்கொண்டோ வீட்டிற்கு செல்லும்போது திடீரென போலீசார் சாலையோரம் நின்று எங்களை மறித்து அபராதம் விதிக்கின்றனர். நாங்கள் தினக்கூலிக்கு செல்வதினால் எங்களால் விதிக்கப்படும் அபராத தொகையை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே போலீசார் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறினர்.

இந்த நிலையில் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த லாலாபேட்டை போலீசார் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மகாதானபுரம்- பழைய ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்