பாரில் மது குடித்தவர் பலி: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உறவினர்கள் மறியல்
பெரம்பலூர் அருகே பாரில் மது குடித்தவர் பலியானதால் அவரது உறவினர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வெள்ளையன் (வயது 37). திருமணமாகாத இவர் வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. பூமாலை நேற்று மதியம் 1 மணியளவில் மது போதையில் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் அருகே அனுமதி பெற்று இயங்கும் மதுபான கூடத்தில் (பார்) சென்று மது குடித்த போது போதையில் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளையனின் குடும்பத்தினர், உறவினர்கள் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நேரம் தஞ்சையில் அரசு நிகழ்ச்சியை முடித்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் வழியாக சென்னை செல்ல காரில் வந்து கொண்டிருந்ததால் அந்தப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட போலீசாரும், மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். மறியல் முடிந்த சில நிமிடங்கள் கழித்து தான் பெரம்பலூருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்து, சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து வெள்ளையனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியும், ஆர்.டி.ஓ. நிறைமதி ஆகியோர் வாலிகண்டபுரம் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட வைத்தனர்.