அரசின் வருமானத்திற்காக மது விற்கவில்லை -அமைச்சர் முத்துசாமி பேட்டி
அரசின் வருமானத்திற்காக மது விற்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ரத்னா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு
பின்னர் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-
டாஸ்மாக் கடைகளுக்கும், கடையில் வசூலான பணத்தை செலுத்தும் ஊழியருக்கும் பாதுகாப்பு தேவை.
வங்கி ஊழியரே கடைக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளலாமா? என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். சென்னையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும்.
வருமானத்திற்கு அல்ல
மது விற்பனை செய்வது வருமானத்திற்கான நோக்கமல்ல. விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, வருமானத்தை கூட்டுவதற்காக அல்ல. மது விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் என்ன? மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்சினைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக 'டெட்ரா பாக்கெட்' வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதனடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.
கடை திறக்கும் நேரம்
அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டிட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு வேலைக்கு செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம்.
அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.
கள் விற்பனை வருமா?
உடலுக்கு நன்மை தரும் கள்ளை விற்பனை செய்வது பற்றி கேட்டால், விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்பது மிக அருமையான விஷயம்.
விவசாயிகளின் நன்மை என்பதில் முதல்-அமைச்சருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அங்கு நடக்கும் தவறுகள் இங்கு வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது.
இது பற்றி ஆய்வு செய்ய தனி கமிட்டியை நியமிக்க இருக்கிறோம். அதை ஒழுங்கு செய்த பிறகுதான் கள் விற்பனை பற்றி யோசிக்க முடியும். அந்த ஆய்வில், அந்த தவறுகளை கட்டுப்படுத்திவிட முடியும் என்று சொன்னால் அதுபற்றி சிந்திப்போம். முதலில் ஆய்வறிக்கை வரட்டும்.
எம்.ஆர்.பி. விலைக்கு கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு அதுபற்றி வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மிகச்சில புகார்கள்தான் வந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.